திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்து பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழையளவு 814.80 மி.மீ. அக்டோபர் மாதம்வரை பெற வேண்டிய இயல்பான மழையளவு 495 மி.மீ. இதுவரை 842.64 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது இம்மாதம் வரை வளமையான மழையளவைவிட 70.23 சதவீதம் அதிகம்.
மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்துக்கு, பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தரமான சான்று விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்க ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’ திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டு63 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளது. ராபி சிறப்பு பருவ நெற்பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி டிசம்பர் 15 ஆகும்.
அதிகாரிகள் ஆய்வு
மாவட்டத்தில் 264 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இம்மாதம் வரை 826 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. 580 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகள் பெறப்பட்டுள்ளது. அதில் 14 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விற்பனை உரிமையாளர்கள் மீதுதுறை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது தரக்குறைவான விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து விவசாய பிரதிநிதிகள் பல்வேறு வேளாண் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
கால்வாய் சீரமைப்பு
விவசாய பிரதிநிதி பி.பெரும்படையார் பேசும்போது, “திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. பருவமழை தொடங்கும் முன் நீராதாரங்களை பராமரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் கால்வாய்கள், குளங்களை சீரமைக்கவில்லை. அணைகளில் இருந்து தண்ணீரை திறக்கும் முன் குளங்களை சீரமைக்க வேண்டும்” என்றார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த ஆட்சியர், “திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு கட்டிடங்களில் தான் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன” என்றார்.
விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் சாகுபடிக்கு தேவையான கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ,அதிகாரிகள் பதில் அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago