கரோனா தடுப்பூசிக்கான இலக்கை முடிக்கும் ஊராட்சிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 13 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது வரை 10.65 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், முதல் டோஸ் தடுப்பூசியை 7.52 லட்சம் பேரும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை 3.13 லட்சம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். காட்பாடி அடுத்த அரும்பருதி மற்றும் கே.வி.குப்பம் பகுதியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் ஆய்வு செய்து பேசும்போது, ‘‘புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், அந்தந்த பகுதிகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசி முகாம் வெற்றிகரமாக செயல்பட பணியாற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கான மாவட்ட இலக்கை நிறைவேற்ற அனைவரும் முழுமையாக செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள கரோனா தடுப்பூசி இலக்கை முழுமையாக நிறைவேற்றும் ஊராட்சிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப் படும்’’ என்றார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago