மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் பள்ளிகள் மீது புகார் அளிக்க தொடர்பு எண்கள் வெளியீடு : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க மறுத்தால், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றோர் மற்றும் மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளசில தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை தனியார் பள்ளிகள் கட்டண நிலுவை மற்றும் பிற காரணங்களுக்காக மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பெற்றோர் பலர் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலருக்கு தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

இதற்கு தீர்வுகாணும் வகையில், கரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின்படி, எந்த ஒரு பள்ளியும் மாணவர்கள் கோரும் சான்றிதழ்களை வழங்க மறுப்பதோ, காலம் தாழ்த்துவதோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் கூறும்போது ‘‘பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் கோரி விண்ணப்பித்த ஒருவார காலத்துக்குள் சான்றிதழ்களை வழங்க அந்தந்த பள்ளிநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாத மாணவர்கள், தங்களின் புகாரை கீழ்கண்ட அலுவலர்களின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

வட்டாரக் கல்வி அலுவலர் 90038 67902, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் 94424 26525, தாராபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் 98427 98855, பல்லடம் மாவட்டக் கல்வி அலுவலர் 94864 11755, உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் 86678 87400, திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 99653 15628 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்