குட்டையில் தேங்கியுள்ள சேறு கலந்த தண்ணீரைக் குடித்து வருவதாக, ஏக்கல்நத்தம் மலைக்கிராம மக்கள், அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமியிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதிமுக துணை ஒருங்கிணைப் பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏவுமான முனுசாமி தன் தொகுதிக்குட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சி மலைக்கிராமங்களான ஏக்கல்நத்தம், ஏக்கல்நத்தம் காலனி, பெரியசக்னாவூர், சின்னசக்னாவூர், நல்லகொண்டனபள்ளி, கொள்ளூர், தாசினாபூர், மகாராஜகடை உள்ளிட்ட 11 பகுதிகளுக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது ஏக்கல்நத்தம், ஏக்கல் நத்தம்காலனி பகுதி மக்கள் முனுசாமியிடம் கூறுகையில், இப்பகுதியில் 200 வீடுகளில் வசித்து வருகிறோம். விவசாயம் செய்து வந்த நிலங்களை வனத்துறைக்குச் சொந்தமானது எனக்கூறி தடுத்துவிட்டனர்.
இதனால் 40 குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்காக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். மேலும் ஆழ்துளை கிணறு போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மோட்டார் வைத்து குடிநீர் வசதி செய்து தரவில்லை. குடிநீருக்காக 2 கி.மீ., தூரம் நடந்து சென்று குட்டையில் தேங்கிய நீரைப் பயன்படுத்தி வருகிறோம். மழைக்காலங்களில் தண்ணீர் சேறும் சகதியுடன் பச்சை நிறமாக உள்ளதைக் குடித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற எம்எல்ஏ குட்டையில் இருந்த நீரை பார்வையிட்டு குடித்துப் பார்த்தார். உடனடியாக இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் மோட்டார் வைத்து டேங்க் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும் ஏக்கல்நத்தம் காலனி பகுதியில் சிதிலமடைந்த வீடுகள் சரி செய்யப்படும், சாலைகளில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தரைப்பாலத்தை உயர்த்திக் கட்ட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி தொடர்ந்து இப்பகுதிகளில் விவசாயம் செய்ய ஆவண செய்வதாகவும் உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago