அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 9,000 டன் முந்திரி விளையும் நிலையில், அவற்றை உடைத்து பருப்பாக பிரித்தெடுக்க தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வி.கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் முந்திரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளையும் முந்திரி பருப்புகளுக்கு இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இம்மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது சாகுபடி பரப்பு 30 ஆயிரம் ஏக்கராக குறைந்துவிட்டது. எனவே, இதன் உற்பத்தியை அதிகரிக்க அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பருப்பை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பூ.விசுவநாதன் கூறியது:
ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டம் பகுதிகளில் அதிகளவு முந்திரி சாகுபடி நடைபெறுகிறது. இதனால், இங்கு ஆண்டுக்கு 9,000 டன் மகசூல் கிடைக்கிறது.
எனவே, இப்பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும்.
தேர்தல் சமயங்களில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் இங்கு முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்குகளை சேகரிக்கின்றனர். ஆனால் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மேலும், முந்திரி பழச்சாறு தொழிற்சாலை அமைக்கப்படாததால், முந்திரியிலிருந்து பருப்பை மட்டும் எடுத்துவிட்டு, பழத்தை வயலிலேயே போட்டுவிடுகின்றனர்.
முந்திரி பழச்சாறில் புரோட்டீன் அதிகளவில் இருப்பதால், முந்திரி பழச்சாறு தொழிற்சாலையும் அமைக்க வேண்டும். இதனால், இப்பகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன், மறைமுகமாக பலருக்கும் வேலை கிடைக்கும்.
மேலும், முந்திரி பயிர்களுக்கு காப்பீடு செய்யும் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மரங்கள் சேதமடையும்போது விவசாயிகள் பெரிய பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, முந்திரி காப்பீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதேபோல தொழிற்சாலை மூலமாகவே தரமான முந்திரி மரக்கன்றுகளை வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்தினால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் முந்திரி சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வருவார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago