ஏழை மக்களை அலைக்கழிக்காமல் : கடன் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் : வங்கி அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

வங்கிகளில் கடன் கேட்டு வரும் ஏழை மக்களை அலைக் கழிக்காமல் கடன் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னோடி வங்கியின் ஏற்பாட்டில் அனைத்து வங்கிகள் பங்கேற்ற மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில் பங்கேற்ற வங்கிகள் மூலம் 2,481 பேருக்கு ரூ.76 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கி பேசும்போது, ‘‘கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதை தவறாமல் திருப்பிச் செலுத்த வேண்டும். அதேபோல், வங்கிகள் கடனுதவி கேட்டு வரும் ஏழைகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களின் விண்ணப்பங்களை கனிவுடன் பரிசீலித்து கடன் வழங்க வேண்டும்.

வாடிக்கையாளர்களிடம் பல் வேறு சந்தேகங்கள், கேள்வி களை கேட்டு அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும். சாதாரண மக்கள் சிரமமம் இல்லாமல் கடன் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்த போதிய அறிவுரைகளை கூறி கடன் வழங்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடனை வங்கிகள் விரைவாக வழங்க வேண்டும்.

கடனுதவி பெற்ற பல்வேறு பெரிய நிறு வனங்கள் நஷ்டத்தால் கடனை திருப்பிச் செலுத்தாத நிலைகளை செய்திகளில் பார்க்கிறோம்.

அந்த கடனுதவி போல் இல்லாமல் சாதாரண மக்கள் சில ஆயிரம் கடன் கேட்கும்போது அதை முறையாக ஆய்வு செய்து கடன் வழங்க வேண்டும். அதேபோல், வாடிக்கையாளர்கள் கடன் பெறும்போது தள்ளுபடி கிடைக்குமா? என்ற ஆதாயத்துக் காக கடன் வாங்கும் மனநிலையை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் பல்வேறு வங்கி களின் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் கண்காட்சியை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இதில், முன்னோடி வங்கி மேலாளர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்