போக்குவரத்து விதிமீறிய 698 நபர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 698 பேர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

மழைக் காலங்களில் ஏற்காடு உள்ளிட்ட சாலைகளில் அதிகளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளையோ, பொருட்களையோ ஏற்றுவதை வாகன உரிமையாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது.

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 213 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 59 பேர், தவறான பாதையில் வாகனம் ஓட்டிய 31 பேர், மது அருந்தி வாகனம் ஓட்டிய 13 பேர் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய 698 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அலுவலர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி பேருந்துகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மழைக் காலத்தில் சாலையோரங்களில் வளரும் செடிகளை அவ்வப்போது சீர் செய்ய ஊரக மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மாநகர காவல் துணை ஆணையர் மோகன்ராஜ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு) பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்