நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறு வனத்தின் சார்பில் கொண்டாடப்படும் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராக்கேஷ் குமார் தலைமை தாங்கினார். நிறுவன இயக்குநர்கள் விக்ரமன், ஷாஜி ஜான், ஜெய்குமார் சீனிவாசன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக என்எல்சி கண்காணிப்பு துறை தலைமைப் பொது மேலாளர் குருசாமிநாதன் வரவேற்று பேசினார். இதில் `நேர்மை’ தொடர்பான உறுதி மொழியானது தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி சந்திரசேகர் பேசுகையில், குறும்படப் போட்டியில் 26 படங்கள் பங்கேற்று உள்ளதாகவும், மாநில வினாடி-வினா போட்டியில் சுமார் 6,500 மாணவ மாணவிகள் பங்கேற்று உள்ளதையும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். விழாவிற்கு தலைமையேற்ற என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் ராக்கேஷ் குமார், இந்தியா சுயசார்பு நாடாகத் திகழும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவில் தயாரித்த பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்தார்.
இதில் பங்கேற்ற தமிழக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் பி.கந்தசாமி பேசுகையில், "மனித வாழ்க்கையின் முக்கிய தேடல், பணமோ, பதவியோ, திறமையோ அல்ல. மாறாக, மகிழ்ச்சி மட்டும்தான். தனி மனித அளவிலும், நிறுவன அளவிலும், கண்காணிப்பு அவசியம். வெகுஜன ஊடகம், சமூக ஊடகம் போன்றவற்றின் தாக்கத்தால் அரசு துறைகளில் நடக்கும் அனைத்தும் சமூகத்தில் உடனடியாக பிரதிபலிக்கிறது, அதனால் தான் உடனடியாக புகார்கள் எழுகின்றன. ஊழல் ஒழிப்பு பணியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வெளிப்படையான நிர்வாகத்தைப் பெற முடியும். அந்த வகையில், என்எல்சி இந்தியா நிறுவனம் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது" என்றார். விழாவின் முடிவில், நேர்மை ரதம் என்ற ஊர்தியை கந்தசாமி கொடியசைத்து வழியனுப்பினார். முன்னதாக கண்காணிப்பு துறை தலைமை அதிகாரியின் தொழில்நுட்ப செயலாளர் இரணியன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago