முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகை : அக். 30-ல் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்

By செய்திப்பிரிவு

நாளை (அக். 29) மதுரை வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்குச் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகிலுள்ள பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அக். 28-ல் ஆன்மீக விழா, 29-ல் அரசியல் விழா, 30-ல் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை ஆகியவை நடக்க உள்ளது. இதையொட்டி அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை (அக்.29) சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு மதுரை வருகிறார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதன்பின், அவர் சிவகங்கை மாவட்டம், கீழடிக்குச் சென்று, அகழாய்வில் கண்டெடுத்த பழங்கால பொருட்களை பார்வையிடுகிறார். கீழடியில் ஆய்வை முடித்து மதுரை திரும்பும் முதல்வர் அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

அக். 30-ம் தேதி காலையில் மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலை, தெப்பக்குளத்தில் மருதுபாண்டியர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார். இதைத் தொடர்ந்து கார் மூலம் பசும்பொன் கிராமத்துக்குச் சென்று தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதன்பின், கார் மூலம் மதுரை விமான நிலையம் வந்து, சென்னைக்கு புறப்பட்டுச் செல்வதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

முதல்வரின் வருகையையொட்டி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்