அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் - நிரந்தர பார்வையாளர் மாடம் அமைக்க திட்டம் : மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி, ஆட்சியர் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பல ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், பிரம்மாண்டமான பார் வையாளர்கள் மாடம் (காலரி) அமைப்பது குறித்து மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் வீர விளை யாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிக விமரிசையாக நடைபெறும். இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண உலகம் முழு வதும் இருந்து சுற்றுலாப் பய ணிகள், தமிழகத்தின் பிற மாவட்ட ஜல்லிக்கட்டுப் பார்வையாளர்கள் திரள்வார்கள். போட்டியைக் கண்டு ரசிக்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் நிரந்தரமாக அலங்காநல்லூரில் பார்வையாளர் மாடம் உள்ளது. பொதுவான பார் வையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்து பார்ப்பதற்கு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும்போது மட்டும் தற் காலிகமாக பார்வையாளர் மாடம் அமைக்கப்படும்.

இந்தப் பார்வையாளர் மாடத்தில் அமர்வதற்குப் பல்வேறு நடை முறைகள் பின்பற்றப்படுவதால் வெளிமாவட்டங்களில் இருந்து ஆவ லோடு வருவோர் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

இதனால், ஜல்லிக்கட்டுப் போட்டி யைக் கண்டுகளிக்க நிரந்தரமான பார்வையாளர் மாடம் அமைக்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர் வலர்களின் நீண்டகாலக் கோரிக்கை யாக உள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் நிரந்தரமாக பார்வையாளர் மாடம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி சந்திரமோகன், ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி உட்பட அதிகாரிகள் குழுவினர் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிரம்மாண்டமான பார்வையாளர் மாடம் நிரந்தரமாக அமைப்பதற்குப் போதுமான இடம் இருக்கிறதா? எந்த இடத்தில் அமைக்கலாம் என்பது குறித்து ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தனர்.

நிரந்தரப் பார்வையாளர் மாடம் அமைத்தால் ஜல்லிக்கட்டு ஆர்வலர் களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகை யில், ‘அலங்காநல்லூர் மட்டுமில்லாது பாலமேட்டிலும் நிரந்தரமாகப் பார் வையாளர் மாடம் அமைப்பதற்கு ஆலோ சனை நடக்கிறது. முதற்கட்டமாக அலங்காநல்லூரிலும், அதற்குப் பின் பாலமேட்டிலும் அமைக்க வாய்ப்புள் ளது,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்