சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்னர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு அரவையின்போது கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.192.50 ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும், இத்தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கூட்டமைப்புச் செயலாளர் ஓ.பி.குப்புதுரை கூறியதாவது:
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த ஆண்டு 1.14 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டன. இந்தாண்டுக்கான அரவை பருவம் வரும் நவம்பர் 24-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு கரும்பு அரவையின்போது டன் ஒன்றுக்கு ரூ.150 ஊக்கத் தொகை வழங்கப்பபடும் என அறிவிக்கப்பட்டது.
இத்தொகை ஆட்சி மாற்றத்தையடுத்து ரூ.192.50 என உயர்த்தப்பட்டது. எனினும், இத்தொகை ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ளது.
ஊக்கத்தொகை நேரடியாக ஆலை மூலம் வழங்கப்படுவதில்லை. வேளாண் துறை மூலம் வழங்கப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இத்தொகையை ஆலை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினை தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் என அனைத்திலும் நிலவி வருகிறது. அதேவேளையில் கடந்த அரவை பட்டத்துக்கான ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிக்கைக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நவம்பர் மாதத்தில் வழங்க நடவடிக்கை
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார் கூறியதாவது:
ஊக்கத்தொகைக்கான நிதி அரசிடம் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த ஆய்வுப் பணி வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் நடைபெறுகிறது.
ஆய்வுக்குப்பின்னர் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களின் ஒப்புதல் பெற்ற பின்னர் ஊக்கத்தொகை வழங்கப்படும். நவம்பர் மாதத்தில் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago