நகர்புற உள்ளாட்சித் தேர்தலின்போது - சேலம் மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தல்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 கோட்டங்களிலும் வெற்றி பெற்று அதிமுகவைச் சேர்ந்தவரே மேயராக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாநகர நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:

சேலம் மாநகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம், மேம்பாலங்கள், தனிகுடிநீர் திட்டம், பூங்காக்கள், சீர்மிகு நகரத் திட்டம், மின்சார கேபிள் பதிக்கும் திட்டம் உள்ளிட்டவை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நகர்புற உள்ளாட்சித் தேர்தலின்போது மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்களிலும் வெற்றி பெற்று அதிமுகவைச் சேர்ந்தவரை மேயராக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்த 525 வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த 100 நாளில் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். தற்போது, 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறி வருகிறார். வெறும் அறிவிப்புகளை வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கருதமுடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடந்தது. மேலும், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்து விடுபட்டவர்களை சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் பாலசுப்ரமணியன், மணி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்