சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை கடந்தாண்டு 35 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை என தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:
பெரும்பான்மையான மக்கள் எவ்வித மத வேறுபாடும் இன்றி சமாதானமாக வாழ விரும்பும் நிலையில், ஒரு சாரார் தங்களது அரசியல் செல்வாக்கை தங்கள் பகுதியில் வளர்த்துக் கொள்வதற்காக வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் முன்னெடுக்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு சமூக அமைதி அவசியம். எனவே, தமிழ்நாட்டில் சமூக அமைதிக்கான சூழலை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
அடக்கத்தலங்களில் சிறுபான்மையின சமுதாய மக்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது. குறிப்பாக, கிறிஸ்தவ கல்லறைகள் முழுமையாக நிரம்பி, மேற்கொண்டு அடக்கம் செய்வதற்கு இடமில்லாத நிலை உள்ளது. இதையடுத்து, தனியார் இடத்தை வாங்கி கல்லறை அமைக்க நடவடிக்கை எடுத்தால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வகுப்புவாத சக்திகள் இடையூறு செய்கின்றன.
எனவே, சமத்துவபுரம் போன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சமூகத்தினருக்குமான சமத்துவ அடக்கத் தலங்களை அரசு ஏற்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் நேரடி மேற்பார்வையில் நிர்வகிக்க வேண்டும் என்று சிறுபான்மையின ஆணையம் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். இந்தக் கோரிக்கையை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை கடந்தாண்டு 35 சதவீதம் பேருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிவிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள், பயன் பெற தகுதியானவர்கள், மின்னஞ்சல், இணையதள முகவரி ஆகியன குறித்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடஉள்ளார். அதன்பிறகு, மாநிலம் முழுவதும் சிறுபான்மையின மக்களுக்கு அந்த கையேடு வழங்கப்படும் என்றார். முன்னதாக திருச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையின ஆணைய கலந்தாய்வுக் கூட்டத்தில், பயனாளிகள் 220 பேருக்கு ரூ.13.10 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆணையத்தின் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்.
திருச்சி ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எம்.பி சு.திருநாவுக்கரசர், எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், ஆணையத்தின் உறுப்பினர்- செயலர் துரை.ரவிச்சந்திரன், ஆணைய உறுப்பினர்கள் எல்.டான் போஸ்கோ, எம்.இருதயம், ஏ.டி.தமீம் அன்சாரி, பிக்கு மௌரியர் புத்தா, எஸ்.பி பா.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago