அடுத்தாண்டு முதல் - பருவதமலை அடிவாரத்தில் : அரசு மகளிர் கல்லூரி செயல்படும் : அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தகவல்

By செய்திப்பிரிவு

பருவதமலை அடிவாரத்தில் அடுத்தாண்டு முதல் அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள பருவத மலை அடிவாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மகளிர் கலைக்கல்லூரி அமைய உள்ள 5 ஏக்கர் இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர், வணிக வளாகத்துடன் கூடிய தங்கும் விடுதியை பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ‘‘கலசப்பாக்கம் தொகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கல்லூரி வேண்டுமென மனு கொடுத்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று கல்லூரி தொடங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே ஒரு அரசு மகளிர் கலைக் கல்லூரி அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி அடுத்த ஆண்டு முதல் கல்லூரி செயல்படும்’’ என்று தெரிவித்தார்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘‘தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக பருவதமலை அடிவாரத்தில் அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடங்கப்படுகிறது. பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோயில், பருவதமலை கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக செய்து கொடுக்கப்படும். மேலும், புதூர் மாரியம்மன் கோயில், காஞ்சி பாலசுப்பிரமணியர் கோயில், எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில், படவேடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க எம்எல்ஏ முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்’’ என்றார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர்கள் அன்பரசி ராஜசேகரன் (கலசப்பாக்கம்), சுந்தரபாண் டியன் (புதுப்பாளையம்), முன்னாள் நகராட்சி தலைவர் தரன், காஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்