களம்பூர் சித்தேரி - மருசூர் ஏரி வரை - நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : ஆட்சியர் பா.முருகேஷிடம் பொதுமக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

களம்பூர் சித்தேரியில் இருந்து மருசூர் ஏரி வரை நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 2 ஆயிரம் விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என நெல்வாய்பாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று அவர்கள் அளித்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் சித்தேரியில் நீர் நிரம்பி வழிந்து சோழந்தாங்கல் ஏரி, நெல்வாய்பாளையம் ஏரி, புலவன்பாடி ஏரி, அரையாளம் ஏரி மற்றும் மருசூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.

இந்நிலையில் கடந்த 25 ஆண்டு களாக, 5 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை. சோழந்தாங்கல் ஏரி மற்றும் நெல்வாய்பாளையம் ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ள தால் நீர்வரத்து இல்லை.

மேலும், தூர்வாராததால் நீர்வரத்துக் கால்வாய் தூர்ந்து கிடக்கிறது. இதனால், களம்பூர் சித்தேரி நிரம்பி கோடி போனாலும் கூட, 5 ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லை. இதனால் ஏரிப்பாசன விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏரியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. குடிநீருக்கு கூட சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி களம்பூர் சித்தேரியில் இருந்து மருசூர் ஏரி வரை உள்ள நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார ஆட்சியர் நடவடிக்கை எடுத்து 2 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்