20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்து, மின்வாரிய ஊழியர்கள் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் வாரியம், போக்குவரத்து உட்பட பொதுத் துறை தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சையாக 10 சதவீத போனஸ் அறிவித்ததைக் கண்டித்தும், 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மின் வாரிய கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்னூரில் உள்ள மின் வாரிய திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணன், சிவசெல்வம், அண்ணாதுரை, கணேசன், எஸ்.கே.செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
இதேபோல, திருச்சி மாவட்டத்தில் மன்னார்புரம், திருவானைக்காவல், லால்குடி, மணப்பாறை, துறையூர் ஆகிய மின் வாரிய அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் துணை மின் நிலைய வாயில் முன் சங்க மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். இதேபோல, திருமானூர், செந்துறை, ஏலாக்குறிச்சி, ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் நான்கு ரோடு அருகிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சங்கத்தின் மண்டலத் தலைவர் அகஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு தொழிற்சங்க கிளைச் செயலாளர் சிங்கராயர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக தஞ்சாவூர் கரந்தை புறநகர் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி தொழிற்சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி தலைமை வகித்தார். இதில், சங்க மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஏஐடியுசி சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago