திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. களக்காடு பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வார்டு வரையறைபணி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சுரண்டை பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வார்டு வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்த முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வார்டு வரையறை பணிகள் நடைபெறுகிறது.
குமரி மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு கொல்லங்கோடு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வார்டு வரையறை பணி நடைபெற்று வருகிறது. இதுபோல் ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி வார்டு வரையறை பணி நடைபெற்று வருகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடுநிலையுடன் நடத்தப்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அது தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச் சாவடி பட்டியல் தயாரித்தல், தேர்தல் கண்காணிப்பு பணிகள், தேர்தல் நடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தேர்தல் பணிகளில் அடங்கியிருக்கிறது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் வே. விஷ்ணு (திருநெல்வேலி), ச. கோபாலசுந்தரராஜ் ( தென்காசி),கி. செந்தில்குமார் (தூத்துக்குடி), மா. அரவிந்த் ( கன்னியாகுமரி), திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ந.கி. செந்தாமரை கண்ணன், மாநகராட்சி ஆணை யர்கள் பா. விஷ்ணுசந்திரன் (திருநெல்வேலி), டி. சாரு (தூத்துக்குடி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நெ. மணி வண்ணன் (திருநெல்வேலி), ரா. கிருஷ்ணராஜ் (தென்காசி), எஸ். ஜெயகுமார் (தூத்துக்குடி), வெ. பத்ரிநாராயணன் (கன்னியாகுமரி), மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) க. அருண்மணி, முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) கு. தனலெட்சுமி, உதவி ஆணையர் (தேர்தல்) சம்பத்குமார், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் விஜயலெட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குத்தாலிங்கம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago