திருவண்ணாமலை புறநகர் குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீரால் 3-வது நாளாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஆடையூர் ஏரி, வேங்கிக் கால் ஏரி, சேரியந்தல் ஏரி, கீழ்நாத்தூர் ஏரி, கும்பன் ஏரி மற்றும் நொச்சிமலை ஏரி என 6 ஏரிகள் 3-வது நாளாக நிரம்பி வழிகின்றன. இதனால், தி.மலையில் இருந்து வேலூர், அவலூர்பேட்டை மற்றும் சென்னை செல்லும் நெடுஞ் சாலைகளை கடந்து வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகள், அவலூர்பேட்டை சாலை மற்றும் திண்வடினம் சாலை வழித்தடத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடானது.
இந்நிலையில் மூன்று நெடுஞ் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் நேற்று வடிந்துள்ளது. அதேநேரத்தில் குடியிருப்பு பகுதி களை சூழ்ந்துள்ள வெள்ளம் வடியவில்லை. மூன்றாவது நாளாக புறநகர் குடியிருப்பு பகுதிகள் தத்தளிக்கின்றன. சுமார் 3 அடி உயரத்துறக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வெள்ளநீர் வெளியேற வேண்டிய நீர் வழி பாதைகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களில் அடைப்பு உள்ளதால், பாதிப்பு தொடர் கிறது. மேலும், வெள்ளநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறும்போது, “புறநகர் பகுதியில் தேங்கி உள்ள வெள்ளநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு மேலாக வெள்ள நீர் தேங்கி இருப்பதால், பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், வெள்ளநீருடன் கலந்து இருப்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகிறோம். எங்களது நிலையை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago