வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவ மழை சராசரி அளவான 343 மில்லிமீட்டர் அளவுக்கு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பருவ காலத்தில் வழக்கமாக நெல், சோளம், மக்காச் சோளம், கொள்ளு, உளுந்து, தட்டை, கொண்டைக் கடலை மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் விதைப்பு செய்யப்படும். விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும். மேலும், கனமழையால் வயல்களில் நீர் தேங்கினால், உடனடியாக நீர் வெளியேறி வழிந்தோட வடிகால் வசதியை செய்ய வேண்டும். மேலும், பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அவற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ச்சியடையும் தருவாயில் உள்ள இளநீர் காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
தென்னை மரங்களின் தலைப் பகுதியில், அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால், எடை குறைந்து தென்னை மரங்களை பாதுகாக்க முடியும். வயல்களில் 33 சதவீதத்துக்கும் மேலாக பயிர் சேதம் ஏதாவது ஏற்பட்டால், வட்டார அளவில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago