ஈரோடு வந்த ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் :

By செய்திப்பிரிவு

ஈரோடு வழியாகச் சென்ற ரயிலில், கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு ரயில் நிலையம் வழியாகச் செல்லும் பயணிகள் ரயில்களில், ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், மதுபானங்கள், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இந்த சோதனையில் பிடிபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஈரோடு வந்தது. ரயில்பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் வகையில், இருந்த பை குறித்து பயணிகளிடம் விசாரித்தனர். அவர்கள் தங்களுக்குச் சொந்தமானது இல்லை என்று தெரிவித்த நிலையில், அந்த பையைச்சோதனையிட்டதில் அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள், போலீஸாரைக் கண்டதும் அதை விட்டுவிட்டு ஓடியிருக்கலாம் என சந்தேகித்த போலீஸார், அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்