நாமக்கல் ரங்கநாதர் கோயில் திருத்தேர் ரூ.56 லட்சத்தில் புனரமைக்கும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

பிரசித்தி பெற்ற நாமக்கல் ரங்கநாதர் கோயில் திருத்தேர் ரூ.56 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணியை சுற்றுலாத் துறை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.

நாமக்கல் குளக்கரைத் திடல் அருகே பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும், ஆண்டுதோறும் பங்குனி தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இக்கோயில் தேர் மராமத்து பணி செய்ய வேண்டும் என தொடர்ந்து பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இக்கோயில் தேர் ரூ.56 லட்சம் மதிப்பில் புனரமைக்க நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இப்பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று கோயில் திருத்தேர் புனரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது:

நாமக்கல் ரங்கநாதர் கோயில் திருத்தேர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ரூ.56 லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. இப்பணி 6 மாத காலத்திற்குள் நிறைவடையும். நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் ஆய்வுசெய்யப்பட்டது. கொல்லிமலையில் 13 ஹெக்டேர் பரப்பளவிலான நிலம் சுற்றுலாத் துறைக்கு சொந்தமாக உள்ளது. அங்கு சுற்றுலாத் துறை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஆய்வு செய்யப்படுகிறது, என்றார்.

நிகழ்வில், மாநிலங்களவை உறப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE