சேலத்தில் களைகட்டியது தீபாவளி விற்பனை : கரோனா விதிகளை மக்கள் பின்பற்ற விழிப்புணர்வு அவசியம்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கு புத்தாடை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க சேலம் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், கரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு 10 நாட்களே உள்ள நிலையில், மக்கள் புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஞாயிறு விடுமுறை நாளான நேற்று சேலத்தில் ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இக்கடைகள் அமைந்துள்ள கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, ஏஏ ரோடு, இஇ ரோடு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழாபோல காட்சியளித்தது.

இதனால், ஜவுளிக் கடைகள் அமைந்துள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பாலங்கள் கட்டப்பட்டிருந்தாலும், பாலங்கள் தரையிறங்கும் இடங்களில் மக்கள் கூட்டமும், வாகனங்களின் நெரிசல் அதிகம் இருந்தது.

கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் மழை பெய்ததால், கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. நேற்று பகலில் மழையின்றி வறண்ட வானிலை நிலவியதால், மக்கள் சிரமமின்றி, புத்தாடைகள், தீபாவளி தள்ளுபடி பொருட்களை வாங்க கடைகளில் கூடினர். சேலம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் சேலத்துக்கு வந்து சென்றதால், பழைய பேருந்து நிலையத்திலும் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

இதனிடையே, முக்கிய கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்திகுற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் முக்கிய சாலைகள், கடை வீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகரைப் போல, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி, எடப்பாடி உள்ளிட்ட புறநகரப்பகுதிகளிலும் நேற்று தீபாவளி விற்பனை காரணமாக ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

இதனிடையே, பொது இடங்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகளில் மக்கள் அதிகம் கூடும் நிலையில் பல இடங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றத் தவறினர்.இதனால், தொற்று அபாயம் நிலவுகிறது.

வரும் நாட்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பொது இடங்களில் மக்கள்கரோனா தடுப்புவிதிகளை முறையாக பின்பற்றுவதை கண்காணிக்கவும், விழிப்புணர்வு செய்யவும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் கவனம்செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்