சென்னை ஐஐடி-யில் கல்வி பயில இடம் கிடைக்கப்பெற்ற அரசுப் பள்ளி மாணவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று ரூ.85,000 நிதியுதவி வழங்கினார்.
திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையும், திருச்சி என்ஐடி-யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை கடந்த 2019-ம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றன. திருச்சி என்ஐடி-யில் உள்ள IGNITE மன்ற மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியை சிறப்பாக வழங்கி வருகின்றனர்.
அதன்படி, இங்கு பயிற்சி பெற்ற மருங்காபுரி வட்டம் செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பி.அருண்குமாருக்கு, சென்னை ஐஐடி-யில் கல்வி பயில இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் 12,175-வது இடமும், ஓபிசி பிரிவில் 2,503-வது இடமும் பெற்றுள்ளார்.
இதையடுத்து, மாணவர் அருண்குமாரை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று நேரில் வரவழைத்துப் பாராட்டி மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.35,000 மற்றும் மாவட்ட நலப் பணி நிதியிலிருந்து ரூ.50,000 என மொத்தம் ரூ.85,000-க்கான காசோலைகளை வழங்கினார். இதற்காக தமிழக அரசுக்கும், ஆட்சியருக்கும் மாணவர் அருண்குமார் நன்றி தெரிவித்தார்.
2021- 2022-ம் ஆண்டுக்கான பயிற்சிக்கு மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜேஇஇ பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தப் பயிற்சி தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் நடைபெறும்.
பயிற்சிக்கான முழு செலவு, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவினங்களை மாவட்ட நிர்வாகம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago