திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு, அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு, நீர்த்தேக்க தொட்டி அமைப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டம், கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு, மழைநீர் வடிகால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக வைத்துக்கொள்ள ஒவ்வொரு அரசு அதிகாரிகளும் முயற்சி எடுக்க வேண்டும். நகராட்சியாக இருந்தாலும் சரி, பேரூராட்சியாக இருந்தாலும் சரி, அரசு அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று அங்கு சேரும் குப்பைக்கழிவுகளை தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்
இது மட்டுமின்றி அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள தற்காலிக கடைகளை அகற்றவேண்டும். சாலையோரங்களிலும், வீதியெங்கும் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் குறித்த விவரங்களை 2 நாட்களில் தயார் செய்து அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். ஊர்புற நூலகம், கிளை நூலகங்களில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.
எனவே, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு நடத்தி அங்கு குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பதை கண்டறிந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
எத்தனை இடங்களில் 2 வார்டுகள் உள்ளன என்பதை கண்டறிந்து அதற்கான அறிக்கையை விரைவாக மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் குபேந்திரன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜேந்திரன், தனபாண்டியன், உதவி செயற்பொறியாளர் அம்சா, நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி, பேரூராட்சி அலுவலர்கள் சேகர், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago