எலும்புகள் வலுவாக இருக்க ‘வைட்டமின் டி’ அவசியம் : கோவை அரசு மருத்துவமனை டீன் அறிவுறுத்தல்

எலும்புகள், மூட்டுகள் வலுவாக இருக்க ‘வைட்டமின் டி’ அவசியம் என கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

எலும்பு அடர்த்தி குறித்த பரிசோதனை முகாம் கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட மருத்துவ முன்களப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 200 பேருக்கு காலில் உள்ள எலும்பு அடர்த்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக, மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: எலும்புகள், மூட்டுகள் வலுவாக இருக்க ‘வைட்டமின் டி’ அவசியம். ஆண்களுக்கு டெஸ்டோஸ் டீரான் ஹார்மோன் குறைவதாலும், பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதாலும் எலும்பு பலவீனம் அடைகிறது. எலும்பு அடர்த்தி குறைவாக உள்ளதற்கு, அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே, எலும்பின் திண்ம அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

கால்சியம் சத்து நிறைந்த பால், தயிர், பால்சார்ந்த உணவுகள், காய்கறிகள், கீரை வகைகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 2 கி.மீ. நடைபயிற்சி, 10 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்ய வேண்டும். மூட்டுகளை நீட்டி மடக்கும்போது தசைகளுக்கும், தசைநார்களின் வலுகூடும். நடைபயிற்சி மேற்கொள்வதால், எலும்புகள் வலுவிழக்காமல் இருக்கும். வைட்டமின் டி கிடைக்க, இளம் வெயில் உடலில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், கோவை அரசு மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை துறையின் இயக்குநர் செ.வெற்றிவேல்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்