மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் - ‘மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம்’ திட்டம் : ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ‘மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என கோவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:

நடப்பாண்டுக்கான வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தின், அனைத்து துறைகளும் ஓர் ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திட்டங்களின் நிதி குறைகிறது எனத் தெரியவந்தால் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். இதுகுறித்து முதல்வர் மற்றும் தொடர்புடைய துறை அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, முழுமையான நிதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவை மாநகர் மட்டுமின்றி அனைத்து கிராமங்களிலும் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டு வாரியாக நானும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ‘மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம்’ என்ற வகையில் சிறப்புத் திட்டமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. பெறப்படும் மனுக்கள் மீது 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும், இத்திட்டத்தின் கீழ் புகார் மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு செல்லும்போது, அனைத்து உயர் அலுவலர்களும் பங்கேற்க வேண்டும். அதேபோல, தொழில்துறையினருக்கு வங்கிக்கடன் வழங்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஒற்றைசாளர முறை பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக தனியாக மொபைல் செயலி தொடங்கப்பட உள்ளது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் பாசனப் பரப்பை அதிகரிக்க முடியும். கோவையில் இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள 6,363 விவசாயிகளுக்கு 3 மாதத்துக்குள் மின் இணைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் ஆணையர் தீபக் எம் தாமோர், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்