விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வழக்கில் - காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி :

By செய்திப்பிரிவு

கோவையில் விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் மாநகர போலீஸார் விசாரிக்க கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள விமானப்படை நிர்வாகவியல் கல்லூரிக்கு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி உட்பட 30 பேர் கொண்ட குழுவினர் பயிற்சி பெற வந்துள்ளனர். இந்நிலையில், விடுதியில் தங்கி இருந்தபோது, அதே குழுவில் பயிற்சி பெற்றுவரும் ஃபிளைட் லெப்டினன்ட் அந்தஸ்தில் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அமித்தேஷ் ஹார்முக் (29) என்பவர், தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக உயரதிகாரிகளிடம் அந்த பெண் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் நடத்திய விசாரணையில் திருப்தி இல்லாததால், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, அமித்தேஷ் ஹார்முக்கை கடந்த செப்டம்பர் 25-ம் தேதி கைது செய்தனர். இவ்வாறு நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் இல்லை என அமித்தேஷ் ஹார்முக் சார்பில் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம், கைது செய்யப்பட்ட அமித்தேஷ் ஹார்முக்கை, விமானப்படை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, போலீஸார் தரப்பில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகராஜன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், “கோவை மாநகர காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கலாம். ஆனால், கைதான அமித்தேஷ் ஹார்முக் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பார். போலீஸார் அவரை விசாரிக்க வேண்டுமெனில், முன்கூட்டியே விமானப்படையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். போலீஸாரின் விசாரணைக்கு ஏற்ற சூழலை விமானப்படை வளாகத்தில் உருவாக்கித்தர வேண்டும். போலீஸாருக்கு எந்தவித இடையூறையும் விமானப்படையினர் ஏற்படுத்தக்கூடாது. விசாரணை முடிவடைந்த பிறகு, போலீஸார் ஆதாரங்களை தயார் செய்து, அதில் ஒரு நகலை விமானப்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்