ஒன்றியத் தலைவர் தேர்தல் ரத்துக்கு திமுக காரணமில்லை - சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் : நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

நாமக்கல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு அதிமுக உறுப்பினர்களை, அதிமுகவினரே சொகுசுவிடுதியில் தங்க வைத்ததால் தான், ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது, என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 22-ம் தேதிநடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 10 பேரை காணவில்லை என பொதுமக்கள் போலீஸில் புகார் செய்ததால் தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்நிலையில், திமுக தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்தியுள்ளதாகவும், அதிமுக கவுன்சிலர்களை யாரும் கடத்தவில்லை என்றும் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே. ஆர். என். ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 22-ம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பை கொடுக்கச் சென்றபோது,அதிமுகவைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் அவர்களது வீட்டில் இல்லை.

இதனிடையே, பொதுமக்கள் அதிமுக உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாததால் காவல் துறையில் புகார் செய்தனர். இதனால் உறுப்பினர்கள் வந்த பிறகு தேர்தல் நடத்தலாம் என்று மாவட்ட நிர்வாகம் தேர்தலை ஒத்திவைத்துள்ளது.

இதில் திமுகவின் பங்கு எதுவும் இல்லை. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுகவினரை திமுகவினர் மிரட்டுகின்றனர் என்று தவறான கருத்தைக் கூறியுள்ளார். எருமப்பட்டி ஒன்றியக்குழு அதிமுக உறுப்பினர்கள் 10 பேரையும், அதிமுகவினரே கடத்திச்சென்று முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு பெண் துணைத்தலைவராக தேர்வாகியுள்ளார். அதை நாங்கள் எவ்விதத்திலும் தடுக்க முயற்சிக்கவில்லை, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்