வரலாற்று ஆவணங்களை காட்சிப்படுத்த நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்று ஆவணங்களின் முக்கியமானவைகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் வரலாற்று சங்கம் சார்பில் சேலம் மாவட்ட வரலாற்று கருத்தரங்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கருத்தரங்கிற்கு தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

பல்வேறு வரலாற்று சிறப்புகளும், ஆதாரங்களும் உணர்வுப் பூர்வமான தகவல்களாக அரசால் பாது காக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 1861-ம் ஆண்டு , ‘சர்தாமஸ் மன்றோ’ உள்ளிட்ட ஆட்சியர்கள், சேலம் மாவட்டத்தில் ஆற்றிய பல்வேறு பணிகள் தொடர்பாக அவர்கள் பதிவு செய்துள்ள வரலாற்று ஆவணங்கள் மூலம் சேலம் மாவட்டத்தின் பெருமைகள் மற்றும் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள முடிகிறது.

சேலம் மாவட்ட முதல் ஆட்சியராக பணிபுரிந்த அலெக்சாண்டர் ரீட் மற்றும் உதவி ஆட்சியராக பணிபுரிந்த தாமஸ் மன்றோ ஆகிய இருவரும் இணைந்து இந்திய அளவில் முதல்முறையாக, ‘ரயத்துவாரி’ எனப்படும் குடிமக்களிடம் நேரடி வரி வசூல் செய்யும் நடைமுறையை தொடங்கினர். 229 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் வரலாற்று ஆவணங்களின் முக்கியமானவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆவண காப்பகத்தில் உள்ள 1861-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழை உரிய வழிமுறைகளை பின்பற்றி மறுபதிப்பு செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இளைய தலைமுறையினர் தங்கள் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்துவதுபோல, தங்கள் பகுதியின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையொட்டி, சேலம் வரலாற்று சங்கம் மற்றும் அரசு அருங்காட்சியகம் சார்பில் பழங்காலப் பொருட்களின் கண்காட்சிநடைபெற்றது. இதில், போர்களின்போது பயன்படுத்தப்பட்ட அரியவகை வாள்கள், கேடயங்கள், ஈட்டிகள் மற்றும் நாணயங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இடம்பெற்றன. கண்காட்சியை ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முல்லை அரசு, சேலம் வரலாற்றுச் சங்க பொதுச் செயலாளர் பர்னபாஸ், பாரமகால் நாணய சங்கம் சுல்தான், ஜம்பூத்து மலை கலைச்செல்வன், வரலாற்று சங்க உறுப்பினர் பெஞ்சமின் பிராங்கிளின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்