அம்மா உணவகம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் : ஓபிஎஸ், கமல் வேண்டுகோள்

அம்மா உணவகம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஓ.பன்னீர்செல்வம்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து அம்மா உணவகங்களை நீர்த்துபோகச் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அம்மா உணவகங்கள் என்பது ஏழை மக்களுக்கான உணவகங்கள்.

இந்த திட்டம் ஏழைகளுக்கானது என்பதால் நிதிநெருக்கடியை காரணம் காட்டி படிப்படியாக இத்திட்டத்தை நீர்த்துபோகச் செய்வது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமல்ஹாசன்: ஏழை மக்களின் பசியாற்றும் மையங்களாக அம்மா உணவகங்கள் திகழ்கின்றன. மலிவு விலையில் இங்கு வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கரோனாவுக்குப் பிறகு பன்மடங்கு பெருகியுள்ளது.

அம்மா உணவகங்களைக் கைவிடும் எண்ணம் இல்லை என்று திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவுநேர உணவு முறையில் மாற்றம்செய்துள்ளதாகவும், பணியாட்களைக் குறைத்து வருவதாகவும் வெளிவரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் செயல்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதே அரசுக்குப் பெருமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்