கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை எல்லைக்குள் இலங்கை கடற்படை துரத்தி சென்று கைது செய்து வருகிறது என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை பாலன் நகரில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழக நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பாலன் நகரில் ரூ.16 கோடி மதிப்பில் 192 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையின் தாக்குதலில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்தார். இலங்கையில் இருந்த அவரது உடல், மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையிலேயே சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து, இலங்கை எல்லைக்குள் துரத்தி சென்று இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர்.
இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல் இனிமேல் நடக்கக்கூடாது என்பதுதான் தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு. இதற்கு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வு காண்பார் என்றார்.
ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago