நெல்லை, தென்காசி, குமரியில் 6-வது கட்டமாக - 1,827 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் :

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 1,827 மையங்களில் நேற்று 6-வது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 6-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 10,13,041 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் 6-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. மொத்தம் 785 சிறப்பு முாகம்கள் காலை 7 மணி முதல் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி பகுதியில் 175 முகாம் நடத்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் 59 நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்துக்கு 1 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கும், 2-வது தவணை செலுத்த வேண்டியவர்களுக்கும் இந்த முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 6 -வதுகட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 487 மையங்களில் நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில் நாகராஜா கோயில் திடல் அருகே நடந்த நடமாடும் கரோனா தடுப்பூசி முகாமை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடக்கி வைத்தார். ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “ கன்னியாகுமரி மாவட்டத்தில் 555 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கும் தனித்தனியாக 52 ஆட்டோக்களில் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்களில் கடந்த வாரத்தை போன்றே தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் 22 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 10,40,454 பேருக் கும், இரண்டாம் கட்டமாக 3,55,209 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநகர நல அலுவலர் விஜயசந்திரன் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்