புதிய ரயில் திட்டங்களைப் பெற எம்.பி.க்கள் குரல் கொடுப்பார்களா? : ரயில்வே வளர்ச்சி குறித்து விவாதிக்க நவ.11-ல் ஆலோசனைக் கூட்டம்

By செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் ரயில்வே வளர்ச்சி பற்றி விவாதிக்க தென் மாவட்ட எம்.பி க்கள் கூட்டம் வரும் 11-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மக்களவை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கவும், ரயில்களை நீட்டிப்பு செய்தல், ரயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்து இயக்குதல் போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படும்.

வரும் 2022-ம் ஆண்டு பட்ஜட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை ரயில்வேதுறை விரைவாக செய்து வருகிறது. இதற்காக மக்களவை உறுப்பினர்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்க வேண்டி கோட்ட அளவில் தனியாக திருச்சி, மதுரை, திருவனந்தபுரத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் கூட்டத்தை நடத்த உள்ளது.

நவ.11-ல் ஆலோசனை

மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து மக்களவை உறுப்பினர்களையும் இணைத்து மதுரையில் வரும் நவம்பர் 11-ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இதுபோல் சென்னை, சேலம், திருச்சி, பாலக்காடு , திருவனந்தபுரம் கோட்டத்தை சார்ந்த எம்.பி.க்களுக்கு தனித்தனியாக கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தின் படி மக்களவை உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னதாகவே தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மதுரையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மக்களவை தொகுதி எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பயணிகள் சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை எம்.பி.க்களுக்கு சமர்ப்பித்துள்ளன.

இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளின் அடிப்படையில் பல்வேறு வகைகளில் விவாதிக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்படும். தெற்கு ரயில்வேயின்கீழ் உள்ள 6 கோட்டங்களில் இருந்து வரும் திட்ட கருத்துருவை ஒழுங்குபடுத்தி ரயில்கள் இயக்குவதில் உள்ள பிரச்சினைகள், ரயில் பெட்டிகள் பராமரிப்பு என எல்லாவற்றையும் ஆராய்ந்து தெற்கு ரயில்வே ரயில் கட்டுப்பாடு மற்றும் இயக்க பிரிவு அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள கால அட்டவணை பிரிவு அதிகாரிகள் இணைந்து ரயில் கால அட்டவணை மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இந்த மாநாட்டில் புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம், தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரயில்களை நீட்டிப்பு செய்தல், ரயில்கள் இயங்கும் சேவைகளை அதிகரித்தல், ரயில்களின் கால அட்டவணையை மாற்றி இயக்குதல் போன்றவற்றை கலந்து ஆலோசித்து ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். மேலும் ரயில்களின் பட்டியல் தயார் செய்யப்படும்.

5% கூட நிவர்த்தியில்லை

இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு எம்.பி.க்களின் கூட்டம் இவ்வாறு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை சமர்ப்பித்து விவாதித்தனர். இதில் சுமார் 5 சதவீத கோரிக்கைகள் கூட நிவர்த்தி செய்யப்படவில்லை என்று தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி. எட்வர்ட் ஜெனி தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் 813 புதிய ரயில்கள் இந்திய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு மிகவும் குறைவான அளவே புதிய ரயில்கள் அறிவிக்கப் பட்டன. தமிழகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தவும், திட்டங் களுக்கு அதிக நிதி ஒதுக்கவும், ஆண்டு தோறும் அதிக ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் கோரிக்கையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்