கோவை மாவட்ட கிராமப்புறங் களில் இருந்து திறமை மிக்க கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் முயற்சியை கோவை மாவட்ட கால்பந்து சங்கம் மேற்கொண்டுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேல்பாரம்பரியம் கொண்ட கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட ‘கிளப்’ அணிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள அணிகள் பதிவு பெற்று விளையாடி வருகின்றன.
ஆண்டுதோறும் பதிவு பெற்ற கிளப் மற்றும் பள்ளி, கல்லூரி அணிகளைக் கொண்டு மாவட்ட கால்பந்து லீக் போட்டியை இச்சங்கம் நடத்தி வீரர்களை ஊக்குவித்து வருகிறது. அதோடு, தமிழ்நாடு மற்றும் தேசிய கால்பந்து போட்டிகளுக்கும் திறமையான வீரர்களை கோவையிலிருந்து அனுப்பி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்று பாதிப்பால் லீக் போட்டிகள் நடத்தப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் எளிய நிலையில் உள்ள திறமையான வீரர்களை சிறு வயது முதலே அடையாளம் கண்டு, அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான வீரர்களாக உருவாக்கும் முயற்சியைத் தற்போது கோவை மாவட்ட கால்பந்து சங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்காக மாவட்டத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து வீரர்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் செயலாளர் (பொறுப்பு) என்.பி.அனில்குமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
மாநகரப் பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மாநில, தேசிய தேர்வுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.ஆனால், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு பெரும்பாலும் இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. தேர்வு நேரத்தில் உரிய தகவல் தொடர்பு இல்லாமல் அவர்களால் பங்கேற்க முடியாத சூழலும் ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்துதிறமையான வீரர்கள் அதிகமானோரைக் கொண்டு வர முடியும். இதற்காகவே, மாவட்டத்தை வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சரவணம்பட்டி, மதுக்கரை, வடவள்ளி, பீளமேடு மற்றும் கோவை மத்தியம் என 8 மண்டலங்களாகப் பிரித்துள்ளோம். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள எங்களது உறுப்பினர்கள், வீரர்கள் மூலமாக அனைத்து பள்ளிகள், குடியிருப்பு பகுதிகளில் தகவல் அளித்து, 14 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து வருகிறோம்.
8 மண்டலங்களின் தேர்வு முடிவில், இரு வயது பிரிவுகளிலும் தலா30 வீரர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு கோவை நேரு விளை யாட்டரங்கில் வைத்து பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். தொடர் பயிற்சி மற்றும் விளையாட்டு நுட்பத் திறன்களை அவர்களுக்கு அளிப்பதன் மூலமாக சிறு வயது முதலே அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க முடியும். இதன் மூலமாக தமிழகம் மற்றும் தேசிய அளவில் கோவை மாவட்ட கால்பந்து வீரர்கள் சிறப்பிடத்தைப் பெற முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago