நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் நேற்று நடந்த ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வரதராஜன் பொறுப்பில் இருந்தார். இவரது மறைவைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்ற இடங்களில், தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. எருமப்பட்டி ஒன்றியக்குழுவில் உள்ள 15 வார்டுகளில், 8 அதிமுக உறுப்பினர்களும், 5 திமுக உறுப்பினர்களும், ஒரு பாஜக மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர்களும் உள்ளனர்.
தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடைபெற இருந்த நிலையில், அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்களை காணவில்லை என தகவல் பரவியது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, தலைவர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எருமப்பட்டி ஒன்றிய அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் பாஜக, சுயேச்சை வேட்பாளர் உள்ளிட்ட 10 பேருடன் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.தங்கமணி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் அதிமுக கவுன்சிலர்களை கடத்தி வைத்ததாக என் மீது போலீஸில் பொய் புகார் கொடுத்துள்ளனர். ஒன்றியத் தலைவர் தேர்தல் நடத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கவுள்ளோம். தேர்தல் நடத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago