சேலம் மாநராட்சியில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி இன்று செலுத்த ஏற்பாடு :

‘சேலம் மாநகராட்சிப் பகுதியில் இன்று (23-ம் தேதி) 205 மையங்களில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,’ என மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 6-வது கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 205 மையங்களில் நடக்கிறது. இதுவரை சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள 13 கோட்டங்களில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதல் தவணை கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி, இரண்டாம் தவணைக்கான தகுதிபெற்று இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சுகாதார அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நினைவுபடுத்தும் அழைப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதன் மூலம் 40,000 நபர்களை தொடர்பு கொண்டு இன்று நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இன்று நடக்கும் முகாமில் மாநகராட்சி முழுவதும் 42 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்