ஒரு வாரமாக தொடர்ந்து பெய்யும் மழையால் - அந்தியூர் - பர்கூர் மலைப்பாதையில் 10 இடங்களில் மண் சரிவு: போக்குவரத்து நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

அந்தியூர் - பர்கூர் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கொள்ளேகால், மைசூரு செல்லும் மலைப்பாதை, வனப்பகுதியின் வழியாகச் செல்கிறது. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்தியூர் - பர்கூர் சாலையில், நெய்கரையில் தொடங்கி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தியூர் - பர்கூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்தியூரிலிருந்து பர்கூர் மலைப்பாதையிலுள்ள மலைக் கிராமங்களுக்கும்,கர்நாடக மாநிலம் கொள்ளேகால், ராமாபுரம் உள்ளிட்ட இடங்களுக்கும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் உள்ள வனசோதனைச் சாவடியிலும், மறுபுறம் பர்கூர் காவல் நிலைய சோதனைச் சாவடியிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளையும், சீரமைப்புப் பணியையும் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் பார்வையிட்டார். வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.

சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறும்போது, அந்தியூர் - பர்கூர் இடையே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஓரிடத்தில் பெரிய பாறை சரிந்து, சாலையில் விழுந்துள்ளது. இதனை வெடிவைத்து தகர்க்க வேண்டிய நிலை உள்ளது. இதர இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு மண் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. நாளை (இன்று) முதல் போக்குவரத்து சீராக வாய்ப்புள்ளது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்