சிறப்பு முகாம்கள் மூலம் முதல் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண் டவர்களில் குலுக்கல் மூலம் தேர்வான அதிர்ஷ்டசாலிகளுக்கு மதுரை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் வாஷிங் மிஷின், ஆண்ட்ராய்டு மொபைல் போன், குக்கர்கள் உட்பட பல்வேறு சிறப்புப் பரிசுகளை வழங்கின.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்கப்படுத்த மாவட்ட, மாநகர் பகுதிகளில் கடந்த 10-ம் தேதி நடந்த சிறப்பு முகாம்களில் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு வாஷிங் மிஷின், ஆண்ட்ராய்டு மொபைல், குக்கர் உட்பட சிறப்புப் பரிசுகளை வழங்குவதாக மதுரை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் அறிவித்திருந்தன.
அதனால் கிராம மக்கள் தடுப்பூசி போட ஆர்வமாகத் திரண்டனர். இதையடுத்து மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வான அதிர்ஷ்டசாலிகளுக்கு வாஷிங் மிஷின், ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், மிக்ஸி, குக்கர், புத்தாடைகள் நேற்று வழங்கப்பட்டன.
அமைச்சர் பி.மூர்த்தி பரிசுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் 62 சதவீதம் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்து நடக்க உள்ள முகாம்களில் 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago