ஈரோடு மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 7,600 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஈரோடு நகரில் நேற்று முன்தினம் மாலை சாரலாகத் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும், நேற்று முன்தினமும் மழை பெய்தது. வரட்டுப்பள்ளம் பகுதியில் அதிகபட்சமாக 48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஈரோட்டில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
வரட்டுப்பள்ளம் 48.8, கோபி 35.8, பவானி 27.6, அம்மாப்பேட்டை 27.6, ஈரோடு 23, சென்னிமலை 22, கொடுமுடி 18.2, கவுந்தப்பாடி 18, குண்டேரிப்பள்ளம், பெருந்துறை 14.2, தாளவாடி 12.5, பவானிசாகர் கொடிவேரி 7.2, நம்பியூர் 4, சத்தியமங்கலம் 3.
பவானிசாகர் அணை நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் நிலையில் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 7,617 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் விநாடிக்கு 4,800 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் குளிக்கவும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago