இலங்கை கடற்படையை கண்டித்து - கோட்டைப்பட்டினம் மீனவர்கள்3-வது நாளாக உண்ணாவிரதம் :

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கிரண்(30), சுகந்தன்(30), சேவியர்(32) ஆகிய 3 பேரும் கடந்த 19-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது.

இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். 2 நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயலைக் கண்டித்தும், இறந்த மீனவர் ராஜ்கிரணின் சடலம் மற்றும் சிறை பிடிக்கப்பட்டுள்ள 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் 20-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

அப்போது, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் சடலம் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 2 மீனவர்களை இதுவரை ஒப்படைக்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு கடலில் இறங்கி போராடுவதற்காக கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE