தென்காசி மாவட்ட ஊராட்சி, ஒன்றியங்களின் - தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக கூட்டணிக்குள் கடும் போட்டி : குருவிகுளத்தில் ஆளுங்கட்சியை வென்றது மதிமுக

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கு ஒருவர், துணைத் தலைவர் பதவிக்கு ஒருவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களாக 10 பேர், துணைத் தலைவர்களாக 10 பேர், ஊராட்சி துணைத் தலைவர்களாக 221 பேர் என மொத்தம் 242 பேரை தேர்ந்தெடுக்க நேற்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக்குழு, அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழுவில் திமுக கூட்டணி பெரும்பான்மை வார்டுகளில் வெற்றி பெற்றது. தலைவர், துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக கூட்டணிக்குள் கடும் போட்டி நிலவியது.

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கு 12-வது வார்டு திமுக உறுப்பினர் தமிழ்செல்வி, 6-வது வார்டு திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். போட்டி இருந்ததால் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 14 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஊராட்சிக் குழுவில் தமிழ்செல்வி 8 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். . துணைத் தலைவர் பதவிக்கு 8-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் உதயகிருஷ்ணன், 1-வது வார்டு திமுக உறுப்பினர் சந்திரலீலா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் உதயகிருஷ்ணன் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கடையம் ஒன்றியம்: கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 10-வது வார்டு உறுப்பினர் செல்லம்மாள், 13-வது வார்டு திமுக உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 17 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். . துணைத் தலைவர் பதவிக்கு 1-வது வார்டு திமுக உறுப்பினர் மகேஷ் மாயவன், 6-வது வார்டு அதிமுக உறுப்பினர் கணேசன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மகேஷ் மாயவன் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கீழப்பாவூர் ஒன்றியம்: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 9-வது வார்டு திமுக உறுப்பினர் காவேரி, 8-வது வார்டு அதிமுக உறுப்பினர் புவனா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 19 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் காவேரி 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு 11-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் முத்துக்குமார், 18-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், 11 வாக்குகள் பெற்று முத்துக்குமார் வெற்றி பெற்றார்.

ஆலங்குளம் ஒன்றியம்: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 13-வது வார்டு திமுக உறுப்பினர் திவ்யா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவர் பதவிக்கு 1-வது வார்டு உறுப்பினர் செல்வக்கொடி, 20-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் அரிநாராயணன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 23 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் செல்வக்கொடி 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலநீலிதநல்லூர் ஒன்றியம்: மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 9-வது வார்டு திமுக உறுப்பினர் மாதவி, 3-வது வார்டு திமுக உறுப்பினர் முத்துமாரி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 12 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் மாதவி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் வந்தால்தான் தேர்தலை நடத்த முடியும். ஆனால், 6 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். கோரம் இல்லாததால் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் ஒன்றியம்: கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக 5-வது வார்டு உறுப்பினர் சுப்பம்மாள் (திமுக), துணைத் தலைவராக 11-வது வார்டு உறுப்பினர் ஐவேந்திரன் (திமுக) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாசுதேவநல்லூர் ஒன்றியம்: வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக 6-வது வார்டு திமுக உறுப்பினர் முத்தையா பாண்டியன், துணைத் தலைவராக 13-வது வார்டு திமுக உறுப்பினர் சந்திரமோகன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குருவிகுளம் ஒன்றியம்: குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 9-வது வா்ரடு மதிமுக உறுப்பினர் விஜயலெட்சுமி, 16-வது வார்டு திமுக உறுப்பினர் முத்துலெட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 17 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் விஜயலெட்சுமி 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு 13-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் முருகேஸ்வரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கரன்கோவில் ஒன்றியம்: சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக 12-வது வார்டு திமுக உறுப்பினர் சங்கரபாண்டியன், துணைத் தலைவராக 9-வது வார்டு திமுக உறுப்பினர் செல்வி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செங்கோட்டை ஒன்றியம்: செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 2-வது வார்டு திமுக உறுப்பினர் திருமலைச்செல்வி, 4-வது வார்டு திமுக உறுப்பினர் வள்ளியம்மாள் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 5 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் திருமலைச்செல்வி 3 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வள்ளியம்மாளுக்கு 2 வாக்குகள் கிடைத்தன. துணைத் தலைவராக 5-வது வார்டு உறுப்பினர் கலா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்காசி ஒன்றியம்: தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு 4-வது வார்டு திமுக உறுப்பினர் ஷேக் அப்துல்லா, 3-வது வார்டு திமுக உறுப்பினர் அழகுசுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் ஷேக் அப்துல்லா 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிக்கு 9-வது வார்டு திமுக உறுப்பினர் கனகராஜ் முத்துப் பாண்டியன், 7-வது வார்டு திமுக உறுப்பினர் மல்லிகா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், கனகராஜ் முத்துப்பாண்டியன் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்