ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் - மேக வெடிப்பால் ஒரேநாளில் 213 மிமீ மழை பதிவு :

ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் மேகவெடிப்பு காரணமாக ஒரே நாளில் 213 மிமீ மழை பதிவானது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய கனமழை இரவு 8 மணி வரை நீடித்தது. அங்கு ஒரேநாளில் 213 மிமீ மழை பதிவானது.

இதனால், அங்குள்ள குளம், குட்டைகள் நிரம்பியதுடன், தென்னங்குடிபாளையம் ஏரியும் நிரம்பியது. மேலும், கனமழை காரணாக, வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி ஆத்தூரில் உள்ள தடுப்பணை நிரம்பி வழிந்தது.

இதனிடையே, நேற்று ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா தேவி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையினர் கூறும்போது, “பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒரேநாளில் 213 மிமீ மழை பெய்ததை வானிலை ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது.

அரிய நிகழ்வான மேகவெடிப்பு காரணமாகவே, பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகனமழை பெய்துள்ளது. வானில் ஒரே இடத்தில் மேகங்கள் திரண்டு அதிகனமழை பெய்வதை மேகவெடிப்பு பெருமழை என்பார்கள்” என்றனர்.

இதனிடையே, சேலத்திலும் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 33.2, ஏற்காடு 13, ஓமலூர் 6, கரியகோவில் 5, சங்ககிரி 4.2, ஆனைமடுவு 4, மேட்டூர் 2.8, காடையாம்பட்டி 2.2 மிமீ மழை பதிவானது.

பவானிசாகரில் 39 மி.மீ.மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை முதல் மதியம் வரை வெயிலும், மதியத்திற்கு பிறகு இரவு வரை மழை பெய்வதும் வாடிக்கையாகி வருகிறது. ஈரோடு புறநகர் பகுதிகளான பவானிசாகர், கோபி, சத்தியங்கலம், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் மழை பெய்தது.

நேற்று மாலை ஈரோடு நகர் மற்றும் புறநகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோட்டில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:

பவானிசாகர் 39.6, கொடிவேரி 26.2, நம்பியூர் 15, வரட்டுப்பள்ளம் 14, சத்தியமங்கலம் 12, கோபி 9.6, அம்மாபேட்டை 5.8, ஈரோடு 5, தாளவாடி, மொடக்குறிச்சி 4.

அணையில் நீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக தொடரும் நிலையில், அணைக்கு விநாடிக்கு 6033 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடியும், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் உபரி நீராக 3200 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்