ஈரோடு மாவட்ட வளம் சார்ந்த திட்டங்களுக்கு - நபார்டு வங்கி ரூ.15,259 கோடி கடன் வழங்க இலக்கு :

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்துக்கான வளம் சார்ந்த கடன் திட்டங்களுக்கு நபார்டு வங்கி ரூ.15,259.60 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நபார்டு வங்கியின் சார்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டு, கூறியதாவது:

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகள், தொழில்துறை, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில், வங்கிகளுக்கான ஆண்டுக் கடன் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, வங்கிகளுக்கு கடன் இலக்கு ஒதுக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டிற்கு ரூ.15,259.60 கோடி கடன் வழங்க நபார்டு வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 10.9 சதவீதம் அதிகமாகும்.

மொத்த கடன் தொகையில், விவசாயத்திற்கு ரூ.8113 கோடி, சிறுகுறு தொழில்களுக்கு ரூ.4449 கோடி, விவசாய உள்கட்டமைப்பிற்கு ரூ.606.78 கோடி, ஏற்றுமதி கடன் ரூ.307.50 கோடி, கல்விக் கடன் ரூ.438.37 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வீட்டுவசதி கடனாக ரூ.976.87 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக ரூ.64 கோடியும், மகளிர் சுயஉதவிக்குழு கடனாக ரூ.847.87 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

இந்நிகழ்வில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் டி.அசோக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (நபார்டு) ஜி.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்