அரசு உதவி கேட்டு மனு கொடுத்தவரிடம் ஆட்சியர் அலுவலக ஊழியர் எனக் கூறி மோசடியில் ஈடுபட முயன்றவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி வரகனேரி பஜார் அந்தோனியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாஷா. இவரது மகள் பெனாசிர் பாத்திமா என்பவர் கணவரை இழந்து வருமானம் இன்றி உள்ளதாகவும், தனது மகளின் வாழ்க்கைக்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கடந்த ஆக.16-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 12-ம் தேதி பாஷாவின் வீட்டுக்கு வந்த ஒருவர், தன்னை, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் தேவபிரசாத் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், பெனாசிர் பாத்திமாவுக்கு அரசு உதவித் தொகை ரூ.5.50 லட்சம் மற்றும் கல்வித்துறையில் பணி வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்திருப்பதாக தெரிவித்து, உதவித் தொகை பெறுவதற்கு வரியாக ரூ.30 ஆயிரத்தை ஒரு வங்கிக் கணக்கு எண்ணைக் கூறி கட்டிவிடுமாறு கூறியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த ஒரு செல்போனையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதன்பின், பணத்தை கட்டுமாறு அடிக்கடி செல்போனில் பாஷாவிடம் பேசியுள்ளார்.
இதில் சந்தேகமடைந்த பாஷா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது, அப்படி யாரும் அங்கு பணியில் இல்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பாஷா, திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில் தேவபிரசாத் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட முயன்றவர், சேலம் கண்ணங்குறிச்சி வ.உ.சி.நகரைச் சேர்ந்த சின்னசாமி மகன் பிரபாகரன் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸாரை மாநகர காவல் ஆணையர் ஜி. கார்த்திகேயன் பாராட்டினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago