திருச்சி மாநகராட்சியில் - நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள அனுமதி :

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் நீர்நிலை புனரமைப்பு (பங்களிப்பு தொகை 50 சதவீதம்), விளையாட்டுத் திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல், எல்இடி மின்விளக்கு அமைத்தல், சிசிடிவி கேமரா பொருத்துதல், பாதுகாப்புடன் கூடிய மரக்கன்றுகள் நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுற்றுச்சுவர், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்த பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒருபங்கு தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. மீதத் தொகையை அரசே வழங்கி பணிகளை மேற்கொள்ளும்.

இந்த திட்டத்தில் தனி நபரோ அல்லது குழுவாகவோ, குடியிருப்போர் நலச் சங்கம் மூலமாகவோ, பொது மற்றும் தனியார் நிறுவனங்களோ தொகையை செலுத்தலாம். மாநகராட்சி மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் பங்களிப்பு 50 சதவீதம் இருக்கும் பணிகளை விரும்பினால் மாநகராட்சியின் மேற்பார்வையில் அவர்களே மேற்கொள்ளலாம்.

இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள பல நிறுவனங்கள் இசைவு தெரிவித்துள்ளன.

எனவே, இத்திட்டத்தின் மூலம் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலகத்தை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்