திருவண்ணாமலை நகரம் அண்ணா நுழைவு வாயில் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் ‘நவிரம் பூங்கா’ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணித எண் தகவல்கள், சூரிய குடும்பத்தின் விவரம், நூலகம், நினைவாற்றலை மேம்படுத்துக்கூடிய கட்டமைப்புகள் மற்றும் சிறுவர்களின் உடலுக்கு நலம் தரும் விளையாட்டு அம்சங்கள் நிறைந்திருந்தது. இங்கு குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும், நடைபயிற்சிக்கும் பாதை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தது. பூங்கா பராமரிப்பு பணியை ரேகன்போக் தொண்டு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. நகரின் முக்கிய இடத்தில் அமைந்திருந்த நவிரம் பூங்காவுக்கு பிள்ளைகளுடன் பெற்றோர் அதிகளவில் வந்து சென்றனர். அனைத்துத் தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நவிரம் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப் பட்டுள்ளன. கரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பூங்காக்கள் மீண்டும் திறக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், நவிரம் பூங்கா விரைவில் திறக்கப்படும் என காத்திருந்த பெற்றோர், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
ஏற்கெனவே, கடந்த 2 வாரங்களாக பூங்காவில் இருந்த தளவாடப் பொருட் களை நகராட்சி நிர்வாகம் அகற்றிய நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கழிப்பறை கட்டிடம், நடைபாதை தளம் உட்பட அனைத்து கட்டுமானங்களும் இடித்து தள்ளப்பட்டன. குளத்தின் மீது நவிரம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், இடிக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
இதே போன்றதொரு சிறப்புமிக்க பூங்காவை, ‘நவிரம் பூங்கா’ என்ற பெயரிலேயே மாற்று இடத்தில் கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago