தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : மாணவர்களுக்கு நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி தொடர்பாக கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள 6-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி 6-ம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவ, மாணவியர் இத்தடுப்பூசி முகாம் தொடர்பாக தங்கள் பகுதிக்குட்பட்ட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய மாணவ, மாணவியர் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படங்களை குறும்படங்களாக தயாரித்து தங்களது கல்லூரி இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலமாக அனைத்து மாணவ, மாணவியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கல்லூரிகளில் முதல் மற்றும் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மற்றும் செலுத்தாத மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி கேட்டறிந்தார்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் நக்கீரன், பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் பச்சைமுத்து மற்றும் கல்லூரி முதல்வர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE