நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழுவில் அதிமுக-வைச் சேர்ந்த 9 மற்றும் 13-வது வார்டு உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். இதனால், மாவட்ட ஊராட்சிக்குழுவில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இதில், அதிமுகவைச் சேர்ந்த சாரதா மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக உள்ளார். தவிர 12 அதிமுக உறுப்பினர்கள், 3 திமுக உறுப்பினர்கள் மற்றும் பாமக, கொமதேக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர்கள் இருந்தனர்.
இதில், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் செந்தில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதிமுகவைச் சேர்ந்த சுந்தரம் ஏற்கெனவே ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியானது. இதற்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக-வைச் சேர்ந்த ஏ.ஆர்.துரைசாமி வெற்றிபெற்றார். இதனால், திமுக உறுப்பினர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், கொல்லி மலைப் பகுதி அதிமுக-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு 9-வது வார்டு உறுப்பினர் பிரகாஷ், பரமத்தி பகுதி அதிமுக-வைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு 13-வது வார்டு உறுப்பினர் பிரேமா ஆகிய இருவரும் நேற்று நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் (கிழக்கு) மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், (மேற்கு)கே.எஸ். மூர்த்தி, சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஊராட்சிக்குழுவில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட ஊராட்சிக்குழு அதிமுக உறுப்பினர்கள் திமுகவில் இணைந்து வருவது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை கைப்பற்ற திமுக காய் நகர்த்துவதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago