‘‘10 நாட்களில் மதுரைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும்,’’ என்று அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் ‘மதுரையின் மாஸ்டர் பிளான்’ கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு, மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்டனர். சு.வெங்கடேசன் எம்பி, எம்எல்ஏ-க்கள் தளபதி, வெங்கடேசன், ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா, அய்யப்பன், பெரியபுள்ளான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
குறையும் சுற்றுலா பயணிகள்
மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பேசுகையில், ‘‘சென்னையில் 29.6 சதவீதம் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மதுரையில் 43 சதவீதம் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கரோனாவால் மதுரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை 48.04 சதவீதம் குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு முதல் மதுரைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை குறையத் தொடங்கி உள்ளது,’’ என்றார்.
கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: மதுரையை அனைத்து துறைகளிலும் மேம்படுத்த உணர்வுப்பூர்வமாக எந்த அரசியலும், உள்நோக்கமும் இல்லாமல் மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்படும். இதில், மாற்றுக் கட்சியினர், பொதுமக்கள், தொழில் முனைவோர் அனைவர் கருத்துகளும் இடம்பெறும். இன்னும் 10 நாட்களில் மதுரையின் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டு முதலமைச்சரிடம் வழங்கப்படும். அதன் அடிப்படையில் மதுரையில் புதிய சாலைகள், தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
மதுரையில் 25 கி.மீ. சுற்றளவில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்படுகிறது. மதுரையில் தற்போதுள்ள சுற்றுச்சாலை போக மற்றொரு சுற்றுச்சாலை அமைக்கப்படும். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விளையாடிய ஒரு மாணவி ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது ஆச்சரியமாக இருக்கிறது. அவரைப் போன்ற ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க ரேஸ்கோர்ஸ் மைதானம் நவீனப்படுத்தப்படும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரானைட், டெக்ஸ்டைல்ஸ் தொழில் ஊக்குவிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: சிங்கப்பூர் போன்ற முக்கிய சர்வதேச நகரங்களில் அடுத்த 50 ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறையும் அந்த மாஸ்டர் பிளான் அப்டேட் செய்யப்படுகிறது. அதனால், ஒவ்வொரு ஆண்டும், அந்த நகரங்கள் புது நகரமாகவே தெரிகின்றன. அதுபோல், மதுரையையும் மேம்படுத்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும். மதுரை மாஸ்டர் பிளான் மக்களின் எண்ணங்கள் அடிப்படையிலேயே உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago