போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்மாற்றிகள் அகற்றப்படுமா? : மின் வாரியம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

மதுரையில் சாலையின் நடுவில் உள்ள மின்மாற்றிகள், மின்கம்பங்கள் அகற்றவதற்கு மின்வாரியம் நிரந்தர நடவடிக்கை எடுக்காததால் நகர சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

மதுரையில் அதிகரிக்கும் வாகனங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப நகர சாலைகள் விசாலமாக இல்லாதது பெரும் குறையாக உள்ளது. ஆனால் இருக்கும் இந்த சாலைகளையும் முழுமையாக பயன்படுத்த முடியாமல் மின்வாரியமும் இடையூறு ஏற்படுத்துகிறது. மின்கம்பங்கள், மின்மாற்றிகளை அமைக்கும்போதே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையின் ஓரத்தில் அமைக்க வேண்டும்.

ஆனால் நகர சாலைகளை ஆக்கிரமித்து டிரான்ஸ்பார்மர்கள் அதிகமாக காணப்பவதால் சாலைகள் மேலும் குறுகலாகி போக்குவரத்து சிக்கலாக உள்ளது. ஒவ்வொரு சாலையிலும் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இருக்கிற இடம் வரை முன்னோக்கி சாலையோர வியாபாரிகள், தனியார் ஆக்கிரமித்து விடுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் மின் வாரியம் அலட்சியமாக செயல்படுகிறது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் புதிய சாலைகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும்போதாவது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களும் அவற்றை அகற்றாமலேயே கடமைக்கு சாலைகளை போட்டுவிட்டு செல்கின்றனர். அதனால், நிரத்தரமாக மதுரை சாலைகளில் மின்மாற்றிகள், மின்கம்பங்களால் போக்குவரத்துக்கு பெரும் நெருக்கடியும், நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு இருந்தால் மின்வாரியம் தாமாக முன்வந்து அகற்றலாம். சம்பந்தப்பட்ட சாலையை நிர்வகிக்கும் அரசு துறைகள் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கலாம்,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்